Posted in

எ.வ.வேலு வீட்டில் ரெய்டு.. விஜிலென்ஸ் கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த திமுக ஆட்சிக் காலத்து ஊழல் புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எ.வ.வேலு இதற்கு மறுப்புத் தெரிவித்து ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, “என் வீட்டிலோ அல்லது எனது சொந்த கிராமத்திலோ லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரு பைசா கூட கைப்பற்றவில்லை; ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது வடிகட்டிய பொய்” என்று திட்டவட்டமாக மறுத்தார். தனது அலுவலகத்தில் இருந்த ‘ஆப்பிள் மேக் ஸ்டூடியோ’ (Apple Mac Studio) உள்ளிட்ட கணினிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்ட அவர், அவற்றில் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் பிரஸ் அறிக்கைகள் மற்றும் தனது சுற்றுப்பயண விவரங்களைத் தவிர வேறு எந்த ரகசிய ஆவணங்களும் இல்லை என்றார். மேலும், சோதனைக்குத் தான் முழு ஒத்துழைப்பு வழங்கி, மனமுவந்து கையெழுத்திட்டே கம்ப்யூட்டர்களை எடுத்துச் செல்ல அனுமதித்ததாக அவர் விளக்கமளித்தார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் சாலை அமைக்கும் பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அப்போதைய அமைச்சர் தொலைபேசி மூலம் உதவினார் என்றும் பதிவாகியுள்ள எஃப்.ஐ.ஆர் (FIR) குற்றச்சாட்டுகளுக்கு அவர் விரிவான பதிலடி கொடுத்தார். “நெடுஞ்சாலைத்துறையைப் பொறுத்தவரை டெண்டர் விடும் அதிகாரம் கோட்டப் பொறியாளர் (EE) மற்றும் மேற்பார்வைப் பொறியாளர் (SE) ஆகிய இருவருக்கு மட்டுமே உள்ளது. டெண்டர் ஆவணங்கள் அனைத்தும் பொதுச் சொத்தாக அந்தந்த அலுவலகங்களில் தான் இருக்குமே தவிர, அமைச்சரின் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இருக்க வாய்ப்பே இல்லை” என்று சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டித் தன் மீதான புகாரை அவர் நிராகரித்தார்.

தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, புதிய தவெக அரசு தங்களைப் பழிவாங்கும் நோக்குடன் டார்கெட் செய்வதாகக் குற்றம் சாட்டினார். “இது ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தின் உச்சம். ஜனநாயக ரீதியாகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக நாங்கள் கேள்வி கேட்பதைக் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் 1984-லேயே சட்டமன்றத்திற்குள் நுழைந்தவன், 7 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவன், மொழிப்போருக்காகச் சிறை சென்றவன். திராவிட உணர்வோடு வளர்ந்த எங்களை இதுபோன்ற அச்சுறுத்தல்களால் முடக்கிவிட முடியாது; மக்கள் பிரச்சினைகளுக்காகச் சட்டமன்றத்தில் தொடர்ந்து உரக்கக் குரல் கொடுப்போம்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.