தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எவ்வித சிறப்புப் பாதுகாப்புச் சலுகைகளுமின்றிச் சென்னை மாநகரின் சாதாரனப் போக்குவரத்து நெரிசலில் தனது வாகனத்தில் காத்திருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் பயணிக்கும் போது ‘கிரீன் காரிடார்’ எனப்படும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சைரன் வாகனங்கள் முழங்கச் சாலைகள் வெறிச்சோட வைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போது தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த பணிகளுக்காகச் சென்னையில் பயணித்த போது, சாதாரணப் பொதுமக்களைப் போலவே மின்கம்பிகள் மற்றும் சிக்னல்களுக்கு இடையே போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
எவ்வித பிரத்யேகக் காவல் துறைப் பாதுகாப்புப் பரிவாரங்களோ அல்லது போக்குவரத்தைச் சீரமைக்கும் சிறப்பு அதிகாரிகளோ இன்றி, சாமான்ய வாகன ஓட்டிகளுக்கு இடையே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காத்திருந்த இந்தக் காட்சி, தமிழக அரசியல் களத்தில் அதிகார மாற்றத்தின் யதார்த்தமான முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் சிலர், தங்கள் வாகனங்களில் இருந்தபடியே அவரை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து இணையதளங்களில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. “ஆட்சியில் இல்லாதபோதும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி சாமான்ய மனிதராக ஸ்டாலின் இயங்குவது அவரது எளிமையைக் காட்டுகிறது” என திமுகவினர் பதிவிட்டு வரும் நிலையில், “தவெக ஆட்சியில் விஐபி கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் சமமான சாலை உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தவெக ஆதரவாளர்கள் இணையத்தில் முழங்கி வருகின்றனர்.