சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசின் கன்னி பட்ஜெட்டைத் (2026-27) தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் என். மரிய வில்சன், ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் வகுத்துள்ள கடுமையான கொள்கைகளை முழங்கிச் சட்டப்பேரவை மண்டபத்தையே அதிர வைத்துள்ளார். “மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூடத் தொட மாட்டோம்; தொட விடமாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; இதற்கு முன் தொட்டவர்களையும் சும்மா விடமாட்டோம்” என்று முதலமைச்சர் விஜய் கூறிய உரையை அப்படியே வழிமொழிந்து நிதியமைச்சர் ஆவேசமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், “நமது மாண்புமிகு முதலமைச்சரைக் கண்டாலே, அவரின் பெயரைக் கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிவதை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று சுட்டிக்காட்டினார். தவெக அரசு பொறுப்பேற்பதற்கு முன், அரசு டெண்டர்களின் மதிப்பீடுகளில் ஒரு பெரும் பகுதி சில தனிநபர்களுக்கும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கும் முறைகேடாகச் சென்று கொண்டிருந்த நிலையை, முதல்வர் விஜய் தனது நேர்மையான நிர்வாகத்தால் முற்றிலும் தடுத்து நிறுத்தி ஒப்பற்ற சாதனையைப் படைத்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், கட்டுமானத் துறையில் நிலவி வந்த லஞ்ச ஊழலை ஒழிக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விளக்கினார். “உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதியைப் பெற தலைமைச் செயலகம் வரை வர வேண்டிய நிலையை முதலமைச்சர் மாற்றியுள்ளார். அதிகாரப் பரவலாக்கல் (Delegation of Powers) மூலம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) நிலையிலேயே விரைவாக அனுமதி பெற்றுக்கொள்ள ஆணையிட்டுள்ளதால், திட்ட அனுமதி பெறுவதில் நிலவி வந்த ஊழல் முற்றிலும் வேரோடு அறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பொது டெண்டர்கள் மற்றும் திட்ட அனுமதிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட நிதியமைச்சர், “மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணத்தை அரசு அண்மையில் விதித்துள்ளது; இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்” எனத் தெரிவித்துத் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.