தமிழக வெற்றி கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ‘தாய்மாமன் சீர் திட்டம்’ (தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப் பட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ் பண்பாட்டில் தாய்மாமனின் அன்பையும் சீர்வரிசை மரபையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முன்னெடுத்த ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்குத் திட்டங்களில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பட்சத்தில், ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசின் சார்பில் தாய்மாமன் சீராக 1 கிராம் தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்துள்ள குழந்தைகள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 4.4 லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தலா 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலமாக ஒப்பந்தப்புள்ளிகளும் (Tenders) கோரப்பட்டு பணிகள் வேகமெடுத்துள்ளன.
செப்டம்பர் 15 அன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கவுள்ளார். எளிய குடும்பங்களின் தாய் சேய் நலனைக் கௌரவிக்கும் விதமாகவும், தமிழரின் பாரம்பரியச் சீர்மரபைப் போற்றும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘தாய்மாமன் சீர் திட்டம்’ மக்கள் மத்தியிலும் தாய்மார்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Keywords: