பிரான்ஸில் அரசு கொண்டு வரவுள்ள பட்ஜெட் திட்டங்கள், வகுப்பறைகளில் அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை மற்றும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்துப் பள்ளி மாணவர்கள் பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள சுமார் 400 பள்ளிகளில் வகுப்புகள் முடக்கப்பட்டன. தலைநகர் பாரிஸ் மட்டுமன்றி லீல், லியோன், மார்சேய் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் இப்போராட்டம் தீவிரமாகப் பரவியுள்ளது.
இப்போராட்டத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பெரும்பாலான சிறுவர்கள் உட்பட மொத்தம் 440 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகப் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரான் நுனேஸ் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 48 காவல்துறை அதிகாரிகளும், 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மற்றும் பல மாணவர்களும் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மாணவர்கள் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்ததால், காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
மாணவர்கள் போராட உரிமை உள்ளபோதிலும், வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரான்ஸ் கல்வித் துறை அமைச்சர் எட்வார்ட் கெஃப்ரே தெரிவித்துள்ளார். இதனிடையே, மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் அரசின் கடுமையான காவல்துறை நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கல்வித் துறைக்கான நிதியை உயர்த்தக் கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை அறிவித்துள்ளதால், பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.