பிரிட்டனின் குளோஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள ‘ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்டு’ (RAF Fairford) என்ற பிரிட்டன் மற்றும் அமெரிக்கக் கூட்டு விமானப்படைத் தளத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக ஐந்து பிரித்தானிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரிட்டன் பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், இந்தத் தாக்குதல் சதியில் ஈரானுக்குத் தொடர்பிருப்பதற்கான “வலுவான அறிகுறிகள்” தென்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, விமானப்படைத் தளத்தை ஒட்டிய சாலைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று வேன்கள் நிறுத்தப்பட்டிருந்ததை உள்ளூர் விவசாயி ஒருவர் கவனித்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறையினர், வேன்களில் எரியக்கூடிய திரவங்கள் (பெட்ரோல்) இருப்பதை உறுதிசெய்து, லண்டனைச் சேர்ந்த 23 முதல் 25 வயதுடைய ஐந்து பிரித்தானிய இளைஞர்களைக் கைது செய்தனர். விசாரணக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாகப் பிரிட்டன் அரசு சுமத்திய குற்றச்சாட்டுகளை இலண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முற்றிலும் மறுத்துள்ளது. இது பிரிட்டனில் ஈரான் மீதான அச்சத்தைப் பரப்புவதற்காக முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த தீவிரமான சதித் திட்டம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் பிரிட்டன் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கப் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள முக்கிய விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து இத்தகைய சதித் திட்டம் தீட்டப்பட்டது பிரிட்டனில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிரிட்டனில் உள்ள அனைத்து ராணுவ மற்றும் விமானப்படைத் தளங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.