ஒளியின் வேகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஒரு செக்கனுக்கு அது சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் (300,000 KM) தூரத்தைக் கடந்துவிடும். இந்த வேகத்தை ஒரு நிமிடத்திற்கு 60-ஆல் பெருக்கி, பின்னர் 24 மணிநேரத்தால் பெருக்கி, அதனை ஒரு வருடத்தின் 365 நாட்களால் பெருக்கினால் வருவதுதான் “ஒரு ஒளி ஆண்டு” (Light Year) எனப்படும். கற்பனை செய்யவே முடியாத இந்த வேகத்தில் பயணித்தாலும், இந்த பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல பில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும்.
ஆனால், விண்வெளிக்கு நடுவே சுமார் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்ட சுவர் பரந்து விரிந்து கிடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதனை முதன்முதலில் பார்த்த நவீன விண்வெளி விஞ்ஞானிகளின் கண்கள் கூட இதனை நம்ப மறுத்தன. ஆனால் இது கற்பனைக்கதை அல்ல, பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் நிஜம்! இது ஒன்றும் மனிதர்கள் செங்கல்லால் கட்டிய சீனப் பெருஞ்சுவர் அல்ல. முழுக்க முழுக்க விண்வெளிப் புகைமூட்டங்கள் (Cosmic Gas), கண்ணுக்குத் தெரியாத கருப்புப் பொருட்கள் (Dark Matter) மற்றும் பல்லாயிரக்கணக்கான விண்மீன் திரள்களின் (Galaxies) தொகுப்பால் உருவான ஒரு பேரதிசயம்.
அண்டவெளியின் எல்லையை உலுக்கிய கண்டுபிடிப்பு
கடந்த 2013 ஆம் ஆண்டு விண்வெளியில் நிகழ்ந்த அதீத காமா கதிர் வெடிப்புகளை (Gamma-Ray Bursts) வரைபடமாக்கி ஆய்வு செய்தபோதுதான் இந்த விசித்திர சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி வீதி (Milky Way) விண்மீன் மண்டலத்தைப் போல பல லட்சம் மடங்கு பெரிய விண்மீன் கூட்டங்களை இந்தச் சுவர் தன்னுள் அடக்கியுள்ளது. பிரபஞ்சத்தின் விதிகளின்படி இவ்வளவு பெரிய வடிவமைப்பு ஒரே இடத்தில் உருவாவதற்கு சாத்தியமே இல்லை என்று நம்பிய வானியலாளர்களுக்கு, இந்த ஹெர்குலிஸ் மகா சுவர் ஒரு பெரும் சவாலாகவே இன்றும் நீடிக்கிறது.
பிரபஞ்சக் கோட்பாடுகளை உடைத்தெறிந்த விசித்திரம்
நவீன அறிவியல் விதிகளின்படி, பிரபஞ்சம் எல்லாப் பகுதிகளிலும் சீராகப் பரவியிருக்க வேண்டும் (Cosmological Principle). ஆனால், இந்த மகா சுவர் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மொத்த அளவில் பத்து சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து 13.8 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், வெறும் சில பில்லியன் ஆண்டுகளுக்குள்ளேயே இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு கட்டமைப்பு எப்படித் தானாக உருவானது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர்.
மனித அறிவுக்கு எட்டாத பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட எல்லை
நாம் வாழும் பூமியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த ஹெர்குலிஸ் சுவர் அமைந்துள்ளது. அதாவது, இன்று நாம் பார்க்கும் அந்தச் சுவரின் ஒளி, பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டதாகும். பிரபஞ்சத்தின் ஆரம்பக் காலத்தில் உருவான இந்த விண்வெளிப் பெருஞ்சுவர், பிரபஞ்சம் எவ்வாறு உருவானது மற்றும் நமக்குத் தெரியாத மாபெரும் ஈர்ப்பு விசைகள் விண்வெளியில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கிய திறவுகோலாகப் பார்க்கப்படுகிறது.