Posted in

ட்ரம்பை கத்தியால் குத்திக் கொல்ல சதி? உளவுத்துறை அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்பைப் படுகொலை செய்ய ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற அமைப்புகள் பல வழிகளில் திட்டமிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டிரம்பின் விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது, துப்பாக்கி சுடுதல் (ஸ்னைப்பர்) மூலம் தாக்குவது அல்லது பொது நிகழ்ச்சியில் வைத்து கத்தியால் குத்திக் கொல்வது போன்ற பல்வேறு கொடூரமான வழிகளில் இச்சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை மற்றும் உளவுத்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) முக்கியத் தளபதியான காசெம் சோலைமணியை அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதற்குப் பழிவாங்கும் நோக்கில், ஈரான் இந்த சதித் திட்டங்களை வகுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்காக அமெரிக்காவிற்குள் முகவர்களை நியமித்து, டிரம்பின் நகர்வுகளைத் தீவிரமாகக் கண்காணித்து தாக்குதல் நடத்த ஈரானிய அமைப்பு திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து முன்னரே உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கச் சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) டிரம்பிற்கான பாதுகாப்பைப் பலமடங்கு அதிகரித்தது. ட்ரோன்கள், சிறப்புத் தாக்குதல் படைகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள் மூலம் அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டபோதிலும், பல்வேறு கோணங்களில் அவரைத் தாக்க ஈரானிய சதித் திட்டங்கள் தொடர்ந்து தீட்டப்பட்டு வந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இவை தங்களுக்கு எதிரான தவறான பிரசாரம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க எல்லைக்குள்ளேயே ஆட்சியில் உள்ள தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களைக் இலக்கு வைத்து ஈரான் இதுபோன்ற நிழல் யுத்தங்களை நடத்தி வருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.