கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றமிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்களும் கிராம மக்களும் தொடர்ந்து 2-வது நாளாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவேரி வனவிலங்கு சரணாலய எல்லைக்கு உட்பட்ட காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அம்மாநில வனத்துறையினர் நடத்திய தாக்குதலில் ஆன்டனி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் வேட்டையாட வந்ததாகக் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், அவர்கள் நிரபராதிகள் என்றும், எவ்வித முன்னறிவிப்புமின்றி கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பலியானவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாகத் திரண்ட பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக வனத்துறையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகுந்த நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உறவினர்கள் உடல்களைப் பெற மறுத்து வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.