அமெரிக்காவைச் சேர்ந்த கள்ஷி (Kalshi) என்ற முன்கணிப்பு சந்தை நிறுவனம், அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) வீடியோ கேமை விளையாடுவதற்காக ஒரு சிறப்பு ஆராய்ச்சியாளரைத் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு 1,00,000 முதல் 1,20,000 டாலர்கள் வரை (சுமார் இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை) ஒப்பந்தச் சம்பளம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான வேலைவாய்ப்பின்படி, விளையாட்டின் வெளியீட்டு நாளான நவம்பர் 19-ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கும் இந்தச் சோதனையில், சம்பந்தப்பட்ட நபர் கேமை விளையாடுவதைத் தனது நேரலை (Live Stream) மூலம் ஒளிபரப்ப வேண்டும். மேலும், விளையாட்டின் கதைக் களமாக அமைந்துள்ள ‘லியோனிடா’ (Leonida) என்ற கற்பனை மாநிலத்தின் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்வதுடன், அது நிஜ உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் வாராந்திர அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.
விளையாட்டின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களையும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நேரலை ஒளிபரப்பு அனுபவம் உள்ளவர்களையும் இந்நிறுவனம் நாடுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களிலும் கேமிங் வட்டாரங்களிலும் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், பலரும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வாளர் தனது கேமிங் திறமையைப் பயன்படுத்தி விளையாட்டில் உள்ள பொருளாதார உத்திகளை ஆராய்ந்து நிறுவனத்திற்கு வழங்குவார். வீடியோ கேம்களை விளையாடுவதன் மூலமும் வருமானம் ஈட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.