Posted in

ஆண்டவனே நம்ம பக்கம்.. தமிழகத்திற்கு வந்த மகிழ்ச்சி செய்தி!

கேரள மாநிலத்தின் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி அருகே அமைந்துள்ள கபினி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்வரத்து அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

வயநாடு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்து வருவதால், கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப, ஆற்றிற்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைப் படிப்படியாக மேலும் உயர்த்த அதிகாரிகளும் நீர்ப்பாசனத் துறையினரும் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.

அணையில் இருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால், கபினி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தாலுகா மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் எந்த நேரத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், கரையோரப் பகுதி மக்கள் தங்களது வீடுகள், சொத்துக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள இந்தத் தண்ணீர், கபினி ஆறு வழியாகப் பாய்ந்து ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவி வரும் இந்தத் தொடர் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அடுத்தடுத்த நாட்களில் கணிசமாக உயரும் என்பதால், டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.