முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசிய வழக்கில் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் திங்கள்கிழமை அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா இல்லை சாத்தானின் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பி அவர் எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில் தவெக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள ஸ்டாலின், “அரசியல் விமர்சனங்களுக்கு அலறித் துடித்து எதிர்க்கட்சியினர் மீது அடக்குமுறையை ஏவும் இந்த அரசு, சொந்தக் கட்சி பெண் உறுப்பினருக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது அமைச்சர்களின் தவறுகளுக்கோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசின் அவலங்களைச் சுட்டிக்காட்டும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் இணைய ஆதரவாளர்களைத் தொடர்ந்து வேட்டையாடித் திசை திருப்பும் ‘டேக் டைவர்ஷன் மாடல்’ அரசாகத் தவெக அரசு செயல்பட்டு வருவதாக அவர் சாடினார்.
கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு அடிப்படைச் சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தனது வழக்கறிஞரையோ அல்லது ஆதரவாளர்களையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அவருக்குத் தேவையான அவசியமான மருந்துகளைக் கொண்டு சென்றவர்களையும் காவல் துறை தடுத்து நிறுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவதூறு வழக்குகளில் தொடர்பில்லாத கடுமையான குற்றப் பிரிவுகளைச் சேர்த்து அரசு தொடர்ந்து நீதிமன்றங்களின் கண்டனத்தைப் பெற்று வருவதாகவும் அவர் நினைவூட்டினார்.
காவல் துறையினருக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ள மு.க.ஸ்டாலின், “ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகளை நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல் துறையின் பணி அல்ல. சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள்; இல்லையென்றால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் (There will be consequences)” என்று கடுமையாக எச்சரித்துள்ளார். திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டு வருவது, தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையேயான போரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.