Posted in

மாஸ்கோவில் அவசரநிலை! உக்ரைன் ட்ரோன் தாக்குதல் அச்சம்: பளபளக்கும் குண்டு வீச்சு காப்பக வரைபடங்கள்!

உக்ரைனின் அதிநவீன நீண்டதூர ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை இலக்கு வைத்துத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாஸ்கோ பிராந்திய அதிகாரிகள் பொதுமக்களுக்கான குண்டு வீச்சு காப்பகங்களின் (Bomb Shelters) வரைபடங்களை அவசர அவசரமாக இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தலைநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் பீதியைத் தணிக்கும் நோக்கில், நிலத்தடிப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு மையங்களை அடையாளம் காட்டும் ஊடாடும் வரைபடங்கள் (Interactive Maps) பொதுமக்கள் பார்வைக்காகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள லியூபெர்ட்ஸி, பொடோல்ஸ்க், ஒடின்ட்சோவோ மற்றும் த்செர்ஷின்ஸ்கி உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகங்கள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இந்த பாதுகாப்பு வரைபடங்களை வெளியிட்டுள்ளன. குடியிருப்புக் கட்டிடங்களின் நிலத்தடி அறைகள் (Basements), நிலத்தடி வாகன நிறுத்தங்கள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பிற நிலத்தடி உள்கட்டமைப்புகள் அவசர காலத்தில் பொதுமக்கள் தஞ்சமடைவதற்கான காப்பகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதங்களில் மாஸ்கோவை நோக்கி நடத்தப்பட்ட பிரம்மாண்ட ட்ரோன் தாக்குதல்களின் போது, எவ்வித முன்எச்சரிக்கை சைரன்களோ அல்லது குறுஞ்செய்திகளோ தங்களுக்கு வரவில்லை எனப் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ட்ரோன்கள் தங்களின் தலைக்கு மேலே பறந்து வந்து வெடித்த பிறகே ஆபத்தை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது உக்ரைன் தயாரித்துள்ள புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளும் மாஸ்கோவை அடையும் திறன் கொண்டவை என்ற தகவல்கள் வெளியானதால், ரஷ்ய அதிகாரிகள் இந்த அவசரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

போர் தொடங்கிய காலத்தில் இது போன்ற காப்பக விவரங்கள் அவசர நிலை அல்லது ராணுவ அணிதிரட்டலின் போது மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிவித்து வந்த ரஷ்ய அரசு, தற்போது தாக்குதல் அச்சுறுத்தல் சொந்த மண்ணிலேயே அதிகரித்துள்ளதால் தங்களது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கும் போது பொதுமக்கள் அடையாளச் சான்றுகள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் உடனடியாக அருகிலுள்ள காப்பகங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.