வெனிசுலா நாட்டின் அரசியல் அமைப்பை மறுசீரமைக்கவும், மக்களாட்சியை மீட்டெடுப்பதற்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் தொடங்குகின்றன. இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், நாட்டின் மிகப்பிரபலமான எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மசாடோ (María Corina Machado) பங்கேற்கவில்லை என்பது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நிகழ்வாண்டு ஜனவரி மாதம் நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலா அரசியல் சூழலில் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தேசிய பேரவையின் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் அரசுத் தரப்பிற்குத் தலைமை தாங்க, எதிர்க்கட்சிகள் சார்பில் 2015-ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றக் கூட்டமைப்பின் தலைவரான தினோரா ஃபிகுவேரா (Dinorah Figuera) பேச்சுவார்த்தைக் குழுவை வழிநடத்துகிறார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்ற முக்கியத் தலைவரான மசாடோ இ பேச்சுவார்த்தையில் இடம்பெறாதது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. மசாடோ தற்போது 2015 சட்டமன்ற உறுப்பினராக இல்லாததாலும், அமெரிக்க அரசு ஃபிகுவேராவின் தலைமையிலான முறையான மன்றத்தை அங்கீகரிப்பதாலும் அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், “அமெரிக்கா எவ்வித நிபந்தனையையும் விதிக்கவில்லை; வெனிசுலா மக்களே தங்களது பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும்” என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மசாடோ, தான் இதில் நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் உண்மையான ஜனநாயக மாற்றத்திற்குத் தடையாக இருக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார். புதிய தேர்தல் ஆணையம் அமைத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் நியாயமான பொதுத் தேர்தலை நடத்துதல் ஆகிய இலக்குகளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த ஐந்து மாத கால ஆலோசனைகள், வெனிசுலாவின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.