எத்தனையோ கிரகங்கள் விண்வெளியில் இருந்தாலும் அமெரிக்கா , மற்றும் உலக நாடுகளின் பார்வை செவ்வாய் கிரகம் மேல் தான் இருந்தது. இதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து பின்னர் மறைந்து இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பியதால், நாசா அங்கே றோவர் என்னும் நடமாடும் ரோபோவை அனுப்பியது. பல ஆண்டு காலமாக அது செவ்வாய் கிரகத்தில் வலம் வந்தும், எதனையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் கடந்த செவ்வாய் கிழமை அன்று பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. றோவர் அனுப்பிய தகவலின் அடிப்படையில், செய்வாயில் ஒரு காலத்தில் உயிரினம் இருந்தது என்பது தற்போது தரவுகளோடு உறுதியாகிறது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக முக்கியமான ஆதாரங்களை நாசாவின் கியூரியாசிட்டி (Curiosity) விண்கலம் தற்போது கண்டறிந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், கார்பன் அடங்கிய கரிம மூலக்கூறுகளின் (Organic Molecules) மிகப்பெரிய தொகுப்பை இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இதில் ஏழு மூலக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் இதற்கு முன்பு கண்டறியப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது. பூமியில் உயிரினங்கள் உருவாவதற்கு அடிப்படையாக விளங்கிய அதே வேதியியல் கூறுகள் செவ்வாயிலும் இருப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பிற்காக, கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் மண்ணில் ஒரு தனித்துவமான வேதியியல் பரிசோதனையை மேற்கொண்டது. செவ்வாயின் ‘மவுண்ட் ஷார்ப்’ பகுதியில் உள்ள ஒரு பாறையைத் துளையிட்டு, அதில் இருந்த துகள்களை ஒரு சிறப்பு வேதிப்பொருள் கரைசலில் கரைத்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் மூலம் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உறைந்த பாலைவனமாகக் காணப்படும் செவ்வாய், ஒரு காலத்தில் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான கிரகமாக இருந்திருக்கலாம் என்பதையே இது காட்டுகிறது.
இந்த ஆய்வில் மொத்தம் 21 வகையான கார்பன் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆர்.என்.ஏ (RNA) மற்றும் டி.என்.ஏ (DNA) ஆகியவற்றின் முன்னோடியான ‘நைட்ரஜன் ஹெட்டோரோசைக்கிள்’ (Nitrogen heterocycle) எனப்படும் வளைய அமைப்பிலான மூலக்கூறு முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உயிரினங்களின் மரபணுத் தகவல்களைக் சுமந்து செல்லும் மூலக்கூறுகளின் அடிப்படை கட்டமைப்பாகும். செவ்வாய் கிரகத்தில் நிலவும் கடுமையான கதிர்வீச்சுகளையும் தாண்டி, இவ்வளவு சிக்கலான கரிமப் பொருட்கள் இத்தனை கோடி ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருவது மிகப்பெரிய வியப்பாகக் கருதப்படுகிறது.
இந்தக் கரிமப் பொருட்கள் செவ்வாயிலேயே உருவானவையா அல்லது விண்கற்கள் மோதியதால் அங்கு வந்தடைந்தவையா என்பது குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. பூமியில் உயிர்கள் தோன்ற விண்கற்கள் வழியாக வந்த கரிமப் பொருட்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுவது போலவே, செவ்வாயிலும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், செவ்வாயில் உயிர்கள் இருந்தனவா என்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்ய, அங்கிருந்து பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வு செய்வது அவசியம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நாசாவின் இந்த ‘கியூரியாசிட்டி’ விண்கலம் 2012-ஆம் ஆண்டு செவ்வாயின் ‘கேல் கிரேட்டர்’ பகுதியில் தரையிறங்கியது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல சவால்களைக் கடந்து இந்த விண்கலம் சேகரித்த தரவுகள், இன்று செவ்வாய் கிரகம் குறித்த நமது பார்வையை மாற்றியுள்ளது. “செவ்வாய் கிரகம் வெறும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மட்டும் இருக்கவில்லை, அது வியக்கத்தக்க வகையில் உயிர்கள் செழித்து வளரக்கூடிய சூழலைக் கொண்டிருந்தது” என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியர் அஸ்வின் வசவதா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.