Posted in

புதிய கோவிட் திரிபு உலகளவில் பரவல்: உலக சுகாதார அமைப்பு தீவிர கண்காணிப்பு

கொரோனா வைரஸின் புதிய வகையான ‘PJ.2.1’ என்னும் உருமாறிய திரிபு தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருவதாக விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளன. கடந்த மே மாதம் கனடா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது.

ஆய்வுத் தகவல்களின்படி, இந்த புதிய திரிபு வைரஸ் மனித செல்களில் எளிதாக ஊடுருவ உதவும் ஏசிஇ2 (ACE2) ஏற்பிகளுடன் தீவிரமாகப் பிணைந்து கொள்ளும் தன்மை கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இது முந்தைய வகைகளைக் காட்டிலும் சற்று விரைவாகப் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், இந்த புதிய திரிபு வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் கூடுதல் தீவிர பாதிப்போ அல்லது அதிகப்படியான உயிரிழப்புகளோ ஏற்படுவதற்கான மருத்துவக் சான்றுகள் இதுவரை இல்லை என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் அறிகுறிகள் சாதாரண சளி மற்றும் காய்ச்சலைப் போலவே இருப்பதால், அறிகுறிகளை மட்டும் வைத்து நோயைக் கண்டறிவது கடினம் என்றும், பரிசோதனை செய்வது அவசியமென்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸின் பரவல் வேகம் குறித்து உலக சுகாதார அமைப்பும் மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Keywords: