Posted in

புடினின் இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் ஆப்பிரிக்கர்களைத் தள்ளும் பிரிட்டன் பழம்பொருள் வியாபாரி!

பிரிட்டனின் ஓல்ட்ஹாம் (Oldham) பகுதியைச் சேர்ந்த 50 வயதான பழம்பொருள் வியாபாரியும் (Antiques Dealer), தன்னை ஒரு தீவிர சோசலிசவாதி என்று கூறிக்கொள்பவருமான பென் ஸ்டிம்சன் (Ben Stimson), உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ராணுவத்திற்காகப் போராடி வரும் நிலையில், தற்போது அவர் மீது ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க இளைஞர்களை ஏமாற்றி, உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யாவின் மிக ஆபத்தான ‘மனித அலைத் தாக்குதலுக்கு’ (Meat Assaults) அவர்களைப் பலியாக்கும் சர்வதேச கடத்தல் ஏஜென்டாக அவர் செயல்பட்டு வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டிலேயே உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கு உதவியதாகப் பிரிட்டனில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் இந்த பென் ஸ்டிம்சன். சிறையிலிருந்து வெளிவந்த அவர், மீண்டும் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று புடினின் ராணுவச் சீருடையை அணிந்துகொண்டு உக்ரைனுக்கு எதிராகப் போரிட்டு வருகிறார். தற்போதைய சூழலில், இவர் தனது சமூக வலைதளக் கணக்குகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழை இளைஞர்களைத் தொடர்புகொண்டு, ரஷ்யாவில் கைநிறையச் சம்பளம் மற்றும் குடியுரிமை வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி ரஷ்ய ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவ்வாறு ஸ்டிம்சனால் ரஷ்யாவிற்கு அழைத்து வரப்படும் ஆப்பிரிக்க இளைஞர்கள், முறையான ராணுவப் பயிற்சியோ அல்லது பாதுகாப்புக் கருவிகளோ இன்றி உக்ரைனின் முன்வரிசைப் போர்க்களங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ராணுவ வல்லுநர்களால் “புடினின் இறைச்சி அரைக்கும் இயந்திரம்” (Putin’s Meat Grinder) என்று வர்ணிக்கப்படும் இந்த கொடூரமான தாக்குதல் களங்களில், ரஷ்யப் படைகள் மனிதக் கேடயங்களாக இந்த ஆப்பிரிக்கர்களைப் பயன்படுத்தி உக்ரைனின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்குகின்றனர். இந்த மோசடியில் சிக்கி உக்ரைன் எல்லையில் பல ஆப்பிரிக்க இளைஞர்கள் ஒரு மாதக் காலத்திற்குள்ளேயே கொடூரமாக உயிரிழந்து வரும் நிலையில், இதனைப் பற்றி எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி பென் ஸ்டிம்சன் பொதுவெளியில் தம்பட்டம் அடித்து வருவது பிரிட்டனில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த நாடான பிரிட்டனால் ஒரு துரோகி (Traitor) என்றும், பயங்கரவாதி என்றும் முத்திரை குத்தப்பட்டுள்ள ஸ்டிம்சனை அவருடைய தந்தை மற்றும் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் ஏற்கனவே ஒதுக்கிவிட்டனர். ரஷ்யாவின் முர்மான்ஸ்க் போன்ற பகுதிகளில் உக்ரைனில் பலியான ரஷ்ய வீரர்களின் தாயார்களுக்கு ஆளும் கட்சியினர் “இறைச்சி அரைக்கும் இயந்திரங்களை” (Meat Grinders) பரிசாக வழங்கி வரும் ஒரு வினோதமான மற்றும் கொடூரமான அரசியல் சூழலுக்கு மத்தியில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே ஆப்பிரிக்கர்களின் உயிரோடு விளையாடி ரஷ்யாவிற்குத் தரகு வேலை பார்த்து வருவது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.