திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் தனி நபர்களுக்கு சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், ஆளுங்கட்சிக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியால் அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைந்துள்ளதாக உளவுத்துறை அனுப்பிய ரகசிய குறிப்பைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுத் தனியாகத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.
பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நிலம், சுவாமிகள் மடத்திற்குப் பாத்தியப்பட்டதாக இருந்து வந்த நிலையில், போலியான ஆவணங்களை உருவாக்கி மிகக் குறைந்த விலைக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி (CB-CID) தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் உள்ளிட்ட நபர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இச்சம்பவத்தைக் கையில் எடுத்துப் போராட்டங்களை அறிவித்துள்ளதால், கோட்டை வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் அலுவலகம் நடத்திய முதற்கட்டத் தனிப்பட்ட விசாரணையில், அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை ஆகிய இரண்டிலும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் முருகக்கடவுளின் பெயரைக் கொண்ட உயர் அதிகாரி ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர் நேரடியாக உள்நோக்கத்துடன் இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்றாலும், குறிப்பிட்ட நபர்களுக்காகச் செய்த பரிந்துரையே (Recommendation) இந்த பிரம்மாண்ட நில ஆக்கிரமிப்பிற்குப் பின்னணியாக இருந்துள்ளதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மீது இதுவரை நேரடியாகக் குற்றம் சுமத்துவதற்கான எவ்வித ஆதாரங்களும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், நில மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர், சிபிசிஐடி விசாரணை நகர்வுகளை ஒவ்வொரு நாளும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.