காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவர்களிடம் அரசியல் பேசி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ. ராஜேஷ், கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைமை மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்றுள்ளனர். பாடம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், வகுப்பறைக்குள் நுழைந்த அவர்கள், தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, “இவர் யார் தெரியுமா? இவர் தான் முதலமைச்சர். உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்” என்று மாணவர்களிடம் பேசியுள்ளனர். மேலும், அங்கு விஜய்யின் புகைப்படத்தை மாட்டி, அதை ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளி வளாகத்திற்குள் எவ்வித அரசுப் பதவியும் இல்லாத நபர்கள் கட்சித் துண்டுடன் நுழைந்து, மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவித்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும், “இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா விஜய் சார்?” எனக் கேள்வி எழுப்பி தவெகவினரின் இந்தச் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். பள்ளிக் கல்வித் துறையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் இந்த அத்துமீறல் அமைந்ததாக சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷை தவெகவிலிருந்து முழுமையாக நீக்கி காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தென்னரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், கட்சியின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை மீறும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.