Posted in

தமிழக அரசின் மொத்த கடன் இவ்வளவா ? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தவெக அரசின் 2026–27 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மாநிலத்தின் கடன் சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த விரிவான தகவல்களை நிதி அமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் கடன் வழாங்குதல் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்து உரையாற்றிய அவர், நடப்பு நிதியாண்டில் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.10.98 லட்சம் கோடி அளவிற்கு முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட கடன் சுமைகள் மற்றும் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பீடுகள் காரணமாக மாநிலத்தின் மொத்தக் கடன் பொறுப்புகள் உயர்ந்துள்ளதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும், திறம்பட நிதி மேலாண்மையை மேற்கொள்வதன் மூலமும், வரி அல்லாத வருவாய்ப் பெருக்க வழிகளைத் திட்டமிடுவதன் மூலமும் மாநிலத்தின் கடன் அளவை மாநில மொத்த உற்பத்தியின் (GSDP) அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

குறிப்பாக, நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.10.98 லட்சம் கோடி கடன் திட்டத்தில், மாநிலத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறைக்கு அதிகபட்சமாக ரூ.6.51 லட்சம் கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) ரூ.3.97 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் தொழில்முனைவோர் கனவுகளை நனவாக்க இக்கடன் வசதிகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் கடன் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்காத வகையில் நிதியமைச்சை வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் நிதிப் பற்றாக்குறையைக் படிப்படியாகக் குறைத்துத் தமிழகத்தை வலுவான பொருளாதாரப் பாதையில் தவெக அரசு கொண்டு செல்லும் எனப் பேரவையில் உறுதி அளித்தார்.