சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கையில், ஏழை எளிய மக்களின் வீடற்ற கனவை நனவாக்கும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, ‘முதலமைச்சரின் இலவச வீடு கட்டும் திட்டம்’ எனப் புதிய வடிவம் பெற்றுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் வீடற்ற ஏழைகளுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வழங்கப்பட்டு வந்த நிதியுதவித் தொகை ரூ.3.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக கணிசமாக உயர்த்தப்பட்டு பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் குடிசைகளிலும், பாதுகாப்பற்ற வீடுகளிலும் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிரந்தரக் கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போதைய கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, தரமான முறையில் வீடுகளைக் கட்டி முடிக்க பழைய தொகையான ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், இத் தொகை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நடப்பு நிதியாண்டிலேயே பல்லாயிரக்கணக்கான புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டி முடிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் அரசு இ நிதிநிலை அறிக்கையில் உறுதி செய்துள்ளது.
அரசு வழங்கும் இந்த உயர்த்தப்பட்ட ரூ.5 லட்சம் நிதியுதவி மூலம் சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் கூடிய தரமான கான்கிரீட் வீடுகளை எவ்வித நிதி நெருக்கடியுமின்றி கட்டி முடிக்க முடியும் எனப் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உறைவிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றத்திற்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.