தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை மூடவோ அல்லது அவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவோ பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவு, வெளியானதுமே 24 மணி நேரத்திற்குள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டதாக வெளியான செய்தி அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தலைகீழ் மாற்றத்தைக் கடுமையாக விமரிசித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (AIADMK IT Wing) சமூக வலைதளங்களில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், “24 மணி நேரத்தில் அப்படி என்ன நடந்தது? பயமா? பதற்றமா? அல்லது பின்னணியில் ஏதேனும் பேக்கரி டீலிங் நடந்ததா?” எனத் தவெக அரசை நோக்கி காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரே நாளில் அரசு தனது கொள்கை முடிவை மாற்றிக் கொண்டது அதன் நிர்வாகத் திறனின்மையையும், கொள்கை முடிவுகளில் இருக்கும் குழப்பத்தையுமே காட்டுவதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாகப் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் சட்டென்று அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டதே இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, அரசின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
அதிமுக ஐடி விங்கின் இந்தத் திடீர் போர்க்கொடி மற்றும் விமரிசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தவெக ஆதரவாளர்களும் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். டாஸ்மாக் பார் உத்தரவு தொடர்பாக எழுந்த இந்தத் திடீர் சர்ச்சை, தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.