எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட அதிகார மோதல்கள் இருப்பதாக மூத்தப் பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம் ஊடக நேர்காணல் ஒன்றில் போட்டுடைத்துள்ளார். இந்தத் திடீர் கைதின் பின்னணியில் உள்ள நகர்வுகள் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் ஆளுமை யார் என்பது குறித்த பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய தராசு ஷ்யாம், “இந்த வழக்கில் உதயநிதியை உடனே கைது செய்ய வேண்டும் என்பதில் ஆட்சியாளர்கள் தீவிரமாக இருந்தனர். 10 நாட்கள் வரை அவரைக் காவலில் வைக்கத் திட்டமிட்டுக் காய் நகர்த்தப்பட்டது” என்று குற்றம் சாட்டினார். நடிகை தொடர்பான பேச்சு மற்றும் தஞ்சாவூர் பொதுக்கூட்ட உரையை அடிப்படையாக வைத்து 9 பிரிவுகளின் கீழ் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத் தலையீட்டிற்கு முன்பாகவே அவரைச் சிறையில் அடைக்க ஒரு குறிப்பிட்ட அதிகாரம் கொண்ட நபர் பின்னணியில் இருந்து இயங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கில், விசாரணைக்குப் பின் உடனடியாக இடைக்கால பிணை மற்றும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், காவல்துறையின் அடுத்தகட்டத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாக தராசு ஷ்யாம் தெரிவித்தார். “சட்டரீதியான போராட்டங்களைச் சந்திப்போம் என உதயநிதி ஸ்டாலின் தரப்பு தயாரான நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தக் கைது அரங்கேறியுள்ளது” எனவும் அவர் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக மற்றும் திமுக இடையே முற்றியுள்ள இந்த மோதல் போக்கு, தேர்தல் களம் தாண்டி காவல் துறை மற்றும் சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் உடனடியாக வெளியான பிணை உத்தரவு ஆகியவை அடுத்து வரவிருக்கும் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தராசு ஷ்யாமின் இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.