Posted in

விஜய் மீது வழக்கு போட சொன்னேன் – கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் திமுக, தவெகவை விளாசிய திருமாவளவன்!

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், அன்றைய தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தான் நேரில் வலியுறுத்தியும், திமுக அரசு தயக்கம் காட்டி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எம்பி தொல். திருமாவளவன், கரூர் கூட்டத்திற்கு விஜய் மிகவும் தாமதமாக வந்ததே கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலுக்கும் பெரும் அசம்பாவிதத்திற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது என்று சுட்டிக்காட்டினார். “பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அசம்பாவிதத்திற்குப் பொறுப்பான விஜய் உள்ளிட்ட அனைவரின் மீதும் உரிய வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய திமுக அரசிடம் நான் வலியுறுத்தினேன்; ஆனால், தவெகவை சரியாகக் கணிக்கத் தவறிய திமுக அரசு, விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருந்துவிட்டது” எனக் கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்துப் பேசிய அவர், திமுக தனது கூட்டணிக் கட்சிகளைச் சரியாக நடத்தத் தவறியதே காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் கூட்டணியை விட்டு வெளியேற முழு முதற்காரணம் என்று தெரிவித்தார். “ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாயலாகவே தவெகவை நான் பார்த்தேன்; இருப்பினும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளுக்கு உடன்பட்டதாலேயே தவெக தலைமையிலான கூட்டணியை நாங்கள் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது” என்று தனது அரசியல் நிலைப்பாட்டிற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

திமுக தனது தவறான அணுகுமுறையால் கூட்டணிக் கட்சிகளைத் தனிமைப்படுத்தித் தோற்றுப்போனதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், கரூர் சம்பவத்தில் விஜய் மீது திமுக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழக அரசியலின் வரலாறே மாறியிருக்கும் என்றும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவெடுத்துள்ள புதிய அரசியல் கூட்டணிகள் மற்றும் திமுக-தவெக குறித்தான திருமாவளவனின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.