Posted in

2.47 லட்சம் கோடி கடன்; மின்சார வாரிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அதிரடி காட்டிய அமைச்சர் நிர்மல் குமார்!

தமிழக மின்சாரத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB / TANGEDCO) நிதி நிலைமை மற்றும் உள்கட்டமைப்பு குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை (White Paper) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். கடந்த 25 ஆண்டுகால மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடியாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கவலை தெரிவித்துள்ளார். கடந்த 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.34,447 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் இதில் அம்பலமாகியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்சார வாரியத்தில் முந்தைய திமுக ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகளைப் பட்டியலிட்டுப் புயலைக் கிளப்பினார். குறிப்பாக, ஏற்கனவே டிரான்ஸ்பார்மர் (Transformer) கொள்முதலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு சிபிஐ (CBI) விசாரணை வரை சென்றுள்ள நிலையில், அதே பாணியில் மின்சாரக் கம்பிகள் (Conductors) கொள்முதல் செய்ததிலும் மாபெரும் ஊழல் நடந்துள்ளது என்றார். மொத்தம் 9 டெண்டர்களில் சுமார் 1,028 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது டிஜிட்டல் மற்றும் மேனுவல் தரவு ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், சோலார் பேனல் அப்ளிகேஷன் ப்ராசஸ் (Solar Application Process) செய்ததிலும், லோட் ஃப்ளோ ஸ்டடி (Load Flow Study) எனப்படும் மின்திறன் ஓட்டப் பரிசோதனை நடத்தாமலும் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சார உரிமங்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். குறுகிய காலமான 20, 25 நாட்களில் அவசர அவசரமாக விதிமுறைகளை மீறிச் செயல்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழகம் முழுவதும் உள்ள மின்சார வாரியத்தின் ஸ்டாக்குகளை (Stock Verification) சரிபார்க்க 40-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வீடியோ பதிவுடன் தீவிர தணிக்கை நடந்து வருவதாகவும் அவர் விவரித்தார்.

மின்சார வாரியம் கடும் நஷ்டத்திலும், சுமார் 49,000 கோடி ரூபாய் புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தாலும், பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு ஒரு நற்செய்தியையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். “இந்த ஆண்டு பொதுமக்களுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ மின் கட்டண உயர்வு (Tariff Revision) கிடையாது; இந்த சுமையை நிறுவனமே ஏற்கும்” என்று அவர் தெளிவுபடுத்தினார். அத்துடன், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான மானியங்கள் என அனைத்தும் கடந்த ஆண்டைப் போலவே எந்தவித மாற்றமும் இன்றித் தொடரும் என்றும், மின் வாரியத்தை மீட்டெடுக்க மாற்று வருவாய் வழிகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் உறுதியளித்தார்.