ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்து அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் முன்வைத்த 7 நாட்கள் இடைக்காலப் போர்நிறுத்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். மேலும், நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டின் போது, கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி புதிய 7 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை அமெரிக்காவிற்கு முன்வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அமெரிக்கா தனது கடற்படைத் தடைகளை விலக்கி ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தினால், 6-வது நாளில் ஹோர்முஸ் ஜலசந்தி கடல்வழிப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டு, 7-வது நாளில் இருநாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
எனினும், ஈரானின் இந்த நிபந்தனைகளுடன் கூடிய சமாதானத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் நிராகரித்துள்ளார். ஈரானின் கோரிக்கையை ஏற்றுத் தடைகளைத் தளர்த்தவோ அல்லது கடற்படை முற்றுகையை வாபஸ் பெறவோ அமெரிக்கா தயாராக இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிடாத வரை ஒப்பந்தம் எதுவும் சாத்தியமில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.
இதுகுறித்துத் தனது அதிகாரிகளிடம் ஆலோசித்த டிரம்ப், வரவிருக்கும் நவம்பர் இடைத்தேர்தல் முடிந்த உடனேயே ஈரான் மீது மீண்டும் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால், செங்கடல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.