Posted in

தேவைப்பட்டால் திமுகவுக்கே போவோம்! – பல கோடிகள் வாங்கி கட்சி தாவத் தயாரான தவெக எம்எல்ஏக்கள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், தற்போதைய தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக வெளியாகி உள்ள தகவல் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரது பெயர்கள் அடிபடுவதுடன், இந்த சதித் திட்டம் தொடர்பாக சென்னை போலீசாரால் மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின்படி, ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த சில அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) பல கோடிகளைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவத் தயாராக இருந்ததாகத் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தவெகவில் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், அவர்கள் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. “தேவைப்பட்டால் நாங்கள் திமுகவுக்கே போகவும் தயங்க மாட்டோம்” என்று அவர்கள் தலைமையிடம் வாக்குவாதம் செய்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிருப்திப் பட்டியலை மோப்பம் பிடித்த உளவுத்துறையும், கட்சித் தலைமையும் அந்த எம்எல்ஏக்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளன. அதில் உத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவுக்கு, சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ. 35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் சிலர் சில கோடிகளை முன்பணமாகக் கொடுத்த நிலையில், உளவுத்துறை போலீஸார் நடத்திய ரகசிய விசாரணையில் குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆட்சி மேலிடத்திற்கு இந்த அதிர்ச்சித் தகவல் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய சூழலில் தவறு செய்த எம்எல்ஏக்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுத்தால், அது ஆட்சிக்கு எதிரான அரசியல் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என தலைமை கணித்துள்ளது. இதனால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பேரம் பேசிய முக்கிய புள்ளிகளையும், பின்னணியில் இருந்தவர்களையும் முதலில் வேட்டையாட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே, சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், “ஆட்சி கவிழ்ப்பு சதி” என்ற பிரிவின் கீழ் போலீசார் அடுத்தடுத்த அதிரடி கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *