தேர்தலில் திமுக தோற்ற பின்னர், உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை இழந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட 24 போலீசாரின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் நேற்று இரவு முதல் இதனைத் திடீரென மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளார்கள். விஜய்க்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் வாங்கியுள்ளது தமிழக போலீஸ். இவை அனைத்தும் ஆளுநர் மேற்பார்வையில் தான் நடக்கிறது என்பது ஊர் அறிந்த உண்மை!
சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள ‘குறிஞ்சி இல்லத்தில்’ வசித்து வரும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பில் தற்போது பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக அந்த வீட்டிற்கு மூன்று ஷிப்டுகள் அடிப்படையில் சுமார் 24 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, உதயநிதிக்கு வழங்கப்பட்டு வந்த அந்தப் பாதுகாப்பினை அரசு அதிகாரிகள் முழுமையாகத் திரும்பப் பெற்றனர்.
பாதுகாப்பு விலக்கப்பட்ட சில நாட்களிலேயே தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறின. தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதில் சில சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். இதனால் அவரது பதவியேற்பு விழா காலதாமதமாகி வரும் நிலையில், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.
இந்தச் சூழலில், பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலின் அடிப்படையில், ஆளும் வர்க்கம் மற்றும் அதிகாரிகளிடையே ஏற்பட்ட சில சமிக்ஞைகளால், உதயநிதி ஸ்டாலின் வீட்டிலிருந்து ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவே அவசர அவசரமாக மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர். இதனூடாக உதய நிதி மீண்டும் துணை முதல்வர் ஆகிறாரா ? ரகசிய ஒப்பந்தங்கள் நடக்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திரும்பப் பெறப்பட்ட அதே 24 போலீசாரும் தற்போது மூன்று ஷிப்டுகள் அடிப்படையில் ‘குறிஞ்சி இல்லத்தில்’ தங்களது பாதுகாப்புப் பணியினைத் தொடர்ந்து வருகின்றனர். ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் கைகோர்க்கலாம் என்ற வதந்திகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் இது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.