அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ‘பாதுகாப்புத் துறை’ (Department of War), ஈரானுடனான தற்போதைய மோதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைக் குறைத்து மதிப்பிடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில், அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்கள் பல பில்லியன் டாலர் மதிப்பில் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக கத்தார், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், அமெரிக்காவின் அதிநவீன ரேடார் அமைப்புகள் மற்றும் போர் விமானங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, கத்தாரில் உள்ள அல் உதைத் (Al Udeid) விமான தளத்தில் இருந்த சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ‘ஏர்லி வார்னிங் ரேடார்’ (AN/FPS-132) சிதைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று எஃப்-15இ (F-15E Strike Eagles) போர் விமானங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்த பல ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களால் செயலிழந்துள்ளன. ஆனால், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இத்தகைய பெரிய அளவிலான பொருள் இழப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், “குறைந்த அளவிலான சேதம்” என்று கூறி உண்மையை மறைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் இதுவரை சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ராணுவ சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அனடோலு ஏஜென்சி (Anadolu Agency) மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைனில், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் ஈரானின் ஏவுகணைகளால் துல்லியமாகத் தாக்கப்பட்டுள்ளன. “டிரம்ப் நிர்வாகம் தனது ராணுவ வெற்றிகளைப் பெருமையாகப் பேசிக்கொண்டாலும், போர்க்களத்தில் அமெரிக்கா சந்திக்கும் இந்த மிகப்பெரிய பொருளாதார மற்றும் ராணுவ இழப்புகள் மறைக்கப்படுகின்றன” என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ராணுவத் தளங்களை அமெரிக்கா வெற்றிகரமாக அழித்துவிட்டதாகத் தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், அமெரிக்க ராணுவ வீரர்கள் 18 பேர் படுகாயமடைந்துள்ளதையும், குவைத்தில் 6 வீரர்கள் கொல்லப்பட்டதையும் பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ‘உண்மை மறைப்பு’ விவகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல் திறனை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டதே இவ்வளவு பெரிய இழப்புகளுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. வரும் நாட்களில் இந்த இழப்புகள் குறித்த மேலும் பல ரகசியத் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.