பயத்துல ஒளிச்சு வச்சிட்டேன்’.. சோதனையின்போது நைசாக நழுவிய பயணி.. சிக்கிய இளைஞர்..!

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தனியார் விமானத்தின் உள்ளே விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருக்கை ஒன்றின் அடியில் உயிர்க்கவச ஆடை வைத்திருந்த பையின் உள்ளே இருந்த சோப்புப் பெட்டியை ஆய்வு செய்தனர்.

அதில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட 821 கிராம் தங்கப்பசை அடங்கிய 3 பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.35.7 லட்சம் மதிப்பலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டு இருக்கும்போது, அவசர அவசரமாக பயணி ஒருவர் விமானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த யாசர் அபராத் (22) என்பதும், தங்கம் வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தது இவர்தான் என்பது தெரியவந்துள்ளது. பயத்தில் தங்கத்தை ஒளித்து வைத்ததாக கூறிய யாசர் அபராத்திடம் விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.