2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அங்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை (EVM) சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அப்பணிகளைப் புறக்கணிப்பதாக தி.மு.க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட இயந்திரங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் முகவரிச் சீட்டுகள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகளில் (Amber Seals) பெரும் குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள தி.மு.க, இச்சம்பவம் குறித்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் மற்றும் வி.வி.பாட் (VVPAT) கருவிகளின் செயல்பாட்டைச் சரிபார்க்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மு.க. ஸ்டாலின் முறையிட்டிருந்தார். இதன் பேரில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ். சமீரன் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பொறியாளர்கள் முன்னிலையில் கடந்த ஜூலை 29 முதல் இ.வி.எம் கருவிகளின் தொழில்நுட்பச் சோதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பரிசோதனையில் திமுக சார்பில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 3 இயந்திரங்களில் கடுமையான விதிக மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்குச்சாவடி எண் 157-இல் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வி.வி.பாட் ஆகியவற்றில் ஒட்டப்பட வேண்டிய முகவரிச் சீட்டுகள் புதியதாகவும், தேவையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படாமலும் இருந்தன; முன் பக்கத்தில் இருக்க வேண்டிய முத்திரைகளும் முறையாக இடப்படவில்லை. எனவே இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது” எனக்கூறி சோதனையை முழுமையாகப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.
திமுகவின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரி ஜி.எஸ். சமீரன், வாக்குப்பதிவு எந்திரங்களில் எவ்வித முறைகேடோ அல்லது தொழில்நுட்பத் தவறுகளோ கண்டறியப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். “அனைத்து எந்திரங்களும் முறையாகச் சீல் வைக்கப்பட்டுப் பாதுகாப்பாகவே உள்ளன; முகவரி முத்திரை பின்புறம் இருந்ததை மட்டுமே திமுக பிரதிநிதிகள் தவறாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இது அச்சுப் பிழை அல்லது மனிதத் தவறுதானே தவிர இ.வி.எம் எந்திரங்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.