ஃபிஃபா 2026 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சர்ச்சைக்கிரிய தற்காப்பு மாற்றங்கள் (Defensive Substitutions) குறித்த விமர்சனங்களுக்கு இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டூக்கல் (Thomas Tuchel) காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “இந்தத் தோல்வியால் வேறு யாரையும் விட அதிகமாகப் பாதிக்கப்பட்டவன் நான் மட்டுமே; இந்த முடிவு என்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்யலாம், ஆனால் இது என் மனதில் விழுந்த வடு” என இங்கிலாந்து எஃப்ஏ வெளியிட்ட ஆவணப் படத்தில் டூக்கல் உருக்கமாகப் பேசியுள்ளார்.
2026 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆன்டனி கார்டன் அடித்த கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், அர்ஜென்டினாவின் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த டூக்கல் ‘5-4-1’ என்ற தற்காப்பு வியூகத்திற்கு மாறினார். கார்டனை வெளியேற்றி எஸ்ரி கொன்சாவைக் களமிறக்கியதுடன், ரீஸ் ஜேம்ஸ் மற்றும் டெக்லான் ரைஸ் ஆகியோரை மாற்றியது ரசிகர்கள் மற்றும் கால்பந்து வல்லுநர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இம்மாற்றங்களைப் பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா, கடைசி நிமிடங்களில் எஞ்சோ பெர்னாண்டஸ் மற்றும் லௌடாரோ மார்டினெஸ் அடித்த கோல்களால் 2-1 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த டூக்கல், “அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாகத் தாக்குதல் வீரர்களைக் களமிறக்கிப் பிரம்மாண்ட அழுத்தத்தைக் கொடுத்தது. மைதானத்தில் நிலைமை கைமீறிச் சென்றதால் ‘இனி எங்களால் தப்ப முடியாது, இது மரணத்திற்காகக் காத்திருப்பது போல இருக்கிறது’ என்று உணர்ந்தேன். அந்த நெருக்கடியைச் சமாளிக்கவும் எதிரணியின் கிராஸ்களைத் தடுக்கவுமே 5 தற்காப்பு வீரர்களுடன் விளையாட முடிவு செய்தேன். இருப்பினும், அந்தத் தற்காப்பு மனநிலைக்கு மிக விரைவாகச் சென்றது எனது தவறுதான்” என ஒப்புக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், “வேறு தாக்குதல் மாற்றங்களைச் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் எனப் பேசுவது எளிது; ஆனால் என்ன நடந்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது” எனக் குறிப்பிட்டார். 1966-க்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குச் செல்லும் இங்கிலாந்தின் கனவு தகர்ந்ததற்குத் தாமஸ் டூக்கலின் இந்த தவறான தந்திரோபாய மாற்றங்களே காரணம் என இங்கிலாந்து ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் சூழலில், டூக்கலின் இந்த வாக்குமூலம் சர்வதேசக் கால்பந்து உலகத்தில் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.