சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆதிமுக தலைமை அலுவலகத்திலும், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் திடீரெனக் குவிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான 300-க்கும் மேற்பட்ட ஆதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யத் திட்டமிட்டு சென்னை நோக்கிப் புறப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக இந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், சி.வி. சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளராகப் பசுபதி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திண்டிவனம், மயிலம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தங்களை ஒதுக்குவது தொடர்பாகப் பசுபதி தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் வெடித்ததால், அதிருப்தியடைந்த நிர்வாகிகள் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து ஆலோசித்துவிட்டுத் தங்களது பதவிகளைத் துறக்க முடிவெடுத்தனர்.
இதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முதலில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னர் ராயப்பேட்டையில் உள்ள ஆதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதங்களை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், ஆதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்தது. சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் நேரடியாகத் தலைமை அலுவலகத்திற்கு வரும்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதலோ அல்லது சட்ட ஒழுங்கு பிரச்சினையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய போதிலும், அசம்பாவிதங்களைத் தடுக்க ஆதிமுக அலுவலகத்தைச் சுற்றித் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.