Posted in

தலிபான் சூழ்ந்த கேரள பெண் யூடியூபர்… கடைசி நிமிடத்தில் தப்பிய அதிர்ச்சி!

கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபரும், தனிமைப் பயணியுமான அருணிமா (Backpacker Arunima), அஃப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் ‘முஜாஹிதீன்’ படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அடுத்த நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 27 முதல் அஃப்கானிஸ்தானில் தனியாகச் சுற்றித் திரிந்த அருணிமா, பாமியான் (Bamyan) பகுதியைச் சென்றடைந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

அஃப்கானிஸ்தான் நாட்டின் சட்டப்படி, ஒரு பெண் தனியாகவோ அல்லது ஆண் துணை (மஹ்ரம்) இல்லாமல் பயணம் செய்யவோ அனுமதி இல்லை. அருணிமாவிடம் உரிய அனுமதிப் பத்திரங்கள் (Permits) இல்லாததாலும், அவர் ஆண் துணையின்றி தனியாக இரவு நேரத்தில் லாரியில் வந்திறங்கியதாலும், தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு, சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்போவதாக எச்சரித்தனர்.

பயத்தில் உறைந்துபோன அருணிமா, சமூக வலைத்தளங்களில் அவசர உதவி கோரி (SOS) பதிவு ஒன்றை வெளியிட்டதுடன், இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பின்னர், தனக்கு முன் அறிமுகமான உள்ளூர்வாசி ஒருவரின் உதவியுடன் தலிபான் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அபராதம் விதிக்க முயற்சி செய்தபோதிலும், தான் உஸ்பெகிஸ்தான் எல்லைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறியதை அடுத்து, கூடுதல் அனுமதிப் பத்திரம் இல்லாமலேயே எல்லைக்குச் செல்ல அதிகாரிகள் இறுதியாக ஒப்புக்கொண்டனர்.

“ஒரு பெண்ணாகத் தனியாகப் பயணம் செய்ததுதான் நான் செய்த ஒரே குற்றம்” எனக் கூறிய அருணிமா, சில மணி நேரங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் ஆளானதாகத் தெரிவித்துள்ளார். தற்போது தான் அஃப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உஸ்பெகிஸ்தான் நோக்கிப் பாதுகாப்பாகப் பயணித்து வருவதாக அருணிமா தனது சமீபத்திய பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.