Posted in

எங்களை அரசியல் பகடைக்காயாக்காதீர்! ராகுல் காந்தியின் ‘எட்டப்பன்’ விமர்சனத்திற்கு எட்டயபுரம் மன்னர் சந்திர சைதன்யா அதிரடி பதிலடி!

தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில், அதற்கு ஆதரவளிப்பவர்களை “21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பன்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்ததற்கு, எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42-வது பட்டத்து மன்னரான சந்திர சைதன்யா கடும் கண்டனமும் அதிரடி பதிலடியும் கொடுத்துள்ளார். “உங்களின் அரசியல் வார்த்தைப் போரில் எங்களை பகடைக்காயாகப் பயன்படுத்தாதீர்கள்” என ராகுல் காந்திக்கு அவர் நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளது தமிழ் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாகக் குற்றம்சாட்டினார். இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைப்பதாகக் கூறிய அவர், அவர்களை “21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பன்” எனக் குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்த ஒப்பீடு வரலாற்று ரீதியாகத் தங்களது குடும்பத்தின் மீது தவறான பிம்பத்தை மீண்டும் உருவாக்குவதாக எட்டயபுரம் ஜமீன் வாரிசுகள் கொதிப்படைந்துள்ளனர்.

ராகுல் காந்தியின் கருத்து குறித்துப் பேசிய எட்டயபுரம் மன்னர் சந்திர சைதன்யா, “அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசும்போது வரலாற்று உண்மைகளைச் சரியாக அறிந்து பேச வேண்டும்” என்று வலியுறுத்தினார். எட்டயபுரம் சமஸ்தானம் 1800-களிலேயே பெண் கல்வியை ஊக்குவித்த முன்னோடி என்றும், தமிழ்நாட்டில் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்திய பெருமை தங்களுக்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், ஆலயப் பிரவேசப் போராட்டம் போன்ற சமூக நீதி நடவடிக்கைகளிலும் தங்களது முன்னோர்கள் தீவிரமாகப் பங்காற்றியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்தார்.

தவறான வரலாற்றுப் புரிதல்களினாலும் சினிமாக்களினாலும் எட்டயபுரம் மன்னர்கள் மீது துரோக முத்திரை குத்தப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்த அவர், எட்டப்பன் பெயரில் எந்தவொரு மன்னரும் நாட்டிற்குத் துரோகம் இழைக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசியல் லாபத்திற்காக ஒரு வரலாற்றுப் பரம்பரையையும் சமஸ்தானத்தின் நற்பெயரையும் களங்கப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி வரலாற்றுப் பின்னணியை முழுமையாகப் படித்த பிறகே இதுபோன்ற ஒப்பீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.