யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஒரே நேரத்தில் நடத்திய வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 73 பேர் படுகாயமடைந்துள்ளதாகச் சவூதி கூட்டுப் படைகளின் அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் அப்ஹா, காமிஸ் முஷைத், நஜ்ரான் மற்றும் ஜாஸான் ஆகிய 4 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஹூதி அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை வீசிப் பேரழிவுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவூதி ஆரம்ஃகோவின் (Aramco) சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
யேமன் எல்லையோரப் பகுதிகளில் அரசுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே எல்லை தாண்டி இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ அறிவித்துள்ளார். இந்தத் திடீர் தாக்குதலால் சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $99 டாலரைத் தாண்டிப் பெரும் பொருளாதார அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, “சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஹூதி தீவிரவாத அமைப்பின் மீது தகுந்த ராணுவப் பதிலடி கொடுக்கப்படும்” எனச் சவூதி கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்க்கி அல்-மாலிகி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.