Posted in

தங்கையை மிரட்டி வாக்குமூலம்? – ஈரான் இரட்டைச் சகோதரிகள் வழக்கில் புதிய சர்ச்சை

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 20 வயதான இரட்டைச் சகோதரிகள் 4 மாதங்களாக ரகசிய முகாமில் வைத்து கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவமும், அதில் ஒரு சகோதரிக்குத் தூக்குத் தண்டனையும் மற்றொருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள கொடூரம் சர்வதேச சமூகத்தை அதிரவைத்துள்ளது.

ஈரானின் இஸ்பஹான் (Isfahan) நகரைச் சேர்ந்த தரானே ரஹிமி (Taraneh Rahimi) மற்றும் ரோமினா ரஹிமி (Romina Rahimi) ஆகிய இரட்டைச் சகோதரிகள், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்சி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்காகப் புரட்சிப் படை (IRGC) முகமூடி மனிதர்களால் நள்ளிரவில் கடத்தப்பட்ட இருவரையும், அவர்களின் தாய் 4 மாதங்களாகத் தேடி அலைந்துள்ளார். இறுதியாக மே மாதம் சிறையில் சந்திக்க அனுமதிக்கப்பட்ட போது, தலைமுடி பிடுங்கப்பட்டு, முழங்கை மற்றும் பாதங்கள் உடைக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவுக்குச் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தனர்.

போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள மறுத்த தரானேவிடம், “குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் உன் இரட்டைச் சகோதரி ரோமினாவை உன் கண்ணெதிரிலேயே பாலியல் வன்கொடுமை செய்வோம்” எனச் சிறைக் காவலர்கள் கொடூர மிரட்டல் விடுத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீதிமன்ற விசாரணையில் தரானேக்குத் தூக்குத் தண்டனையும், ரோமினாவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதை மூலம் பெறப்பட்ட போலி வாக்குமூலத்தைக் கொண்டு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களிடையே அச்சத்தை உருவாக்கிப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே ஈரான் அரசு அப்பாவிப் பெண்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனைகளை வழங்கி வருவதாகக் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.