கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த ‘நோவா’ இசைவிழா மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலின் சுவடுகள் இன்னமும் ஆறாத வடுவாக நீடித்து வருகின்றன. இந்தத் தாக்குதலின் போது தனது கண் முன்னாலேயே காதலி சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும், அந்தப் பெருந்துயரத்தின் வேதனையிலிருந்தும் மீள முடியாமல் தவித்து வந்த 30 வயதான ரோய் ஷாலெவ் (Roei Shalev) என்ற வாலிபர், சோகத்தின் உச்சகட்டமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலின் போது தனது காதலி மாப்பல் ஆடமை (Mapal Adam) காப்பாற்ற ரோய் ஷாலெவ் முயன்றபோதிலும், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாப்பல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ரோய் ஷாலெவ், தனது காதலியின் உடலருகே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கிடந்து பின்னர் ராணுவத்தினரால் மீட்கப்பட்டார். இருப்பினும், காதலியின் பிரிவும் அந்தத் தாக்குதல் தந்த உளவியல் ரீதியான மன உளைச்சலும் அவரைத் தொடர்ந்து வாட்டி வதைத்து வந்தன.
காதலியின் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் தீவிர மன அழுத்தத்தில் இருந்த ரோய் ஷாலெவ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் “என்னால் இந்த வேதனையை இனி தாங்க முடியாது, அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்; என் உடல்தான் உயிரோடு இருக்கிறது, உள்ளே எல்லாம் இறந்துவிட்டது” என்று உருக்கமான பதிவொன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதன் பின்னர், நெடுஞ்சாலை அருகே எரியும் காரில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
அக்டோபர் 7 தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த பலரும், தங்களது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்துப் கடுமையான உளவியல் பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. உயிரிழந்த காதலியின் நினைவு நாளில் வாலிபர் முடிவைத் தேடிக் கொண்ட சம்பவம் உறவினர்களையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.