நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்திருக்கும் மூன்றாவது விருந்தினரான '3I/ATLAS', விண்கற்கள் குறித்த அடிப்படை அறிவியலையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் 'மீர்காட்' (MeerKAT) ரேடியோ டெலஸ்கோப், கடந்த நவம்பர் மாதம் இந்த விண்கல்லில் இருந்து ஒரு விசித்திரமான ரேடியோ சிக்னலைக் கண்டறிந்தது.
விஞ்ஞானிகள் இது பனிக்கட்டி ஆவியாவதால் ஏற்படும் இயற்கையான சிக்னல் என்று கூறினாலும், ஹார்வர்டு பேராசிரியர் ஏவி லோப் உள்ளிட்ட சிலர், இது ஒரு விண்கலத்தின் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் சிக்னலாக இருக்கலாமோ எனச் சந்தேகம் எழுப்புகின்றனர். குறிப்பாக, இதிலிருந்து வெளிப்படும் வாயுக்கள் ஒரு ராக்கெட் என்ஜினின் உந்துவிசை (Propulsion) போலச் செயல்படுவது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த விண்கல்லின் வேதியியல் கலவை (Chemical Composition) மற்றொரு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இதில் இரும்பை விட நிக்கல் (Nickel) தாதுவின் அளவு பல மடங்கு அதிகமாக உள்ளது. பொதுவாக விண்கற்களில் இரும்புதான் அதிகமாக இருக்கும், ஆனால் 3I/ATLAS-ல் நிக்கல் இவ்வளவு அதிகமாக இருப்பது இயற்கையானது அல்ல என்று ஏவி லோப் கூறுகிறார்.
இது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் 'நிக்கல் அலாய்' (Nickel Alloy) உலோகங்களைப் போலத் தெரிவதாகவும், அதனால் இது ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு விசித்திரமான விஷயம், இந்த விண்கல்லில் இருந்து சூரியனை நோக்கிய திசையில் வெளிப்படும் 'சன்வார்ட் ஜெட்' (Sunward Jet) எனப்படும் வாயுப் பிழம்புகள் ஆகும். பொதுவாக விண்கற்களில் வால் பகுதி சூரியனுக்கு எதிர் திசையில்தான் இருக்கும். ஆனால், 3I/ATLAS சூரியனை நோக்கியே வாயுவைப் பாய்ச்சுவது மிகவும் அபூர்வமானது. இது தற்செயலாக நடக்க 0.0025% மட்டுமே வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. விண்வெளியில் சிதறி கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்த அல்லது விண்கலத்தின் திசையை மாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு அதிநவீன தொழில்நுட்பமாக இது இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது பூமிக்கு மிக அருகில் 1.8 வானியல் அலகு (AU) தொலைவில் கடந்து செல்லும் இந்த விண்கல்லை நாசா (NASA) மற்றும் பிற விண்வெளி ஆய்வு மையங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. "இது ஒரு சாதாரண பனிக்கட்டிப் பாறைதான்" என்று ஒரு தரப்பு வாதிட்டாலும், "இதில் மறைந்துள்ள தொழில்நுட்ப மர்மங்கள் அதிகம்" என்று மற்றொரு தரப்பு கூறி வருகிறது.
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விண்கல் வியாழன் கிரகத்தைக் கடக்கும் போது, அங்கிருக்கும் 'ஜூனோ' (Juno) விண்கலம் இதனை ஆய்வு செய்யும். அப்போதுதான் இது நிஜமான விண்கல்லா அல்லது வேற்றுகிரகவாசிகளின் 'ஸ்பை' விண்கலமா என்ற உண்மை உலகிற்குத் தெரியவரும்.
