விவேக்கின் மனைவி சொன்ன அந்த வார்த்தை; கலங்கி நிற்கும் தமிழகம்!

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அரசு மரியாதை அளித்ததை `நான் என்றும் மறக்கமாட்டேன்` என விவேக்கின் மனைவி அருட்செல்வி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு பிரியமான மரக்கன்றுகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக் மகள் தேஜஸ்வினி அவருக்கு இறுதி மரியாதை செய்த பின்னர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. பலரும் அவரது இல்லம் அமைந்துள்ள சாலிகிராமம் தொடங்கி மேட்டுக்குப்பம் வரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ”என் கணவரை இழந்துள்ள நேரத்தில் எங்களுக்கு தக்க தருணத்தில் உதவிய மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை செலுத்தியதற்கு நன்றி. அதை எப்போதும் நாங்கள் மறக்கமாட்டோம். காவல்துறை சகோதர்களுக்கு மிக்க நன்றி. ஊடகத்துறையினருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி,” என அவர் தெரிவித்தார்.

Contact Us