கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ள சென்ற ஆட்டோ டிரைவர் – வீடு திரும்பிய போது காத்திருந்த பேரதிர்ச்சி!

ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் கோவிட் தடுப்பூசி பெற குடும்பத்துடன் வெளியே சென்ற போது அவரது வீடு களவாடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனவே தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து போட்டு கொள்ள மனைவியுடன் தடுப்பூசி மையத்திற்கு சென்ற ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டில் இருந்த நகை மற்றும் லட்சக்கணக்கான ரொக்க பணத்தை அள்ளி சென்றுள்ளது தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டெல்லி போலீஸார், புதன்கிழமை பிற்பகல் ஆட்டோ டிரைவரும் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட வீட்டை பூட்டி விட்டு சென்ற பின், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆட்டோ டிரைவரின் வீட்டை கொள்ளையடித்ததாகவும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.25 லட்சம் ரொக்கத்துடன், நகைகளையும் அள்ளி சென்று விட்டதாகவும் கூறி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் வடகிழக்கு டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் நடந்துள்ளது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 40 வயதான ஆட்டோ டிரைவர் அரவிந்த்குமார் பட்வா கொள்ளை சம்பவம் பற்றி கூறி உள்ளார்.

“தொற்றின் தீவிரம் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக நானும், எனது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை. இந்நிலையில் தான் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடுவதற்கான ஒரு மையத்தில் தடுப்பூசிக்காக பதிவு செய்தேன். இதனை அடுத்து அடுத்த நாள் புதன்கிழமை காலை 10 மணியளவில், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு தடுப்பூசி போடுவதற்காக வெளியே சென்றேன்.

தடுப்பூசி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்பதால் உஸ்மான்பூரில் உள்ள எனது மாமியார் வீட்டில் அவர்களை இறக்கிவிட்டு, எனது மனைவியை மட்டும் அழைத்து கொண்டு தடுப்பூசி போட்டு கொள்வதற்காக லக்ஷ்மி நகருக்கு சென்றேன். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் நுழைவுவாயில் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ மற்றும் அலமாரிகள் அனைத்தும் திறந்திருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தேன். கொள்ள சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து சென்று விட்டனர்”என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் தகவல் தெரிவித்த அரவிந்த்குமார் பட்வா, “நாங்கள் அனைவரும் வெளியே சென்ற பிறகு வீட்டிற்கு வெளியே ஒருவர் அமர்ந்து தொலைபேசியில் பேசுவதை பார்த்ததாக அருகில் இருப்போர் கூறினார்கள். அநேகமாக அந்த நபர் தான் வீட்டிற்கு வெளியே உள்ள நிலைமை குறித்த விவரங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியவனாக இருப்பான் என்று சந்தேகிக்கிறோம். எனது சகோதரியின் நகைகள் உட்பட வீட்டில் இருந்த அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்”என்று தெரிவித்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து Karawal Nagar காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Contact Us