மதுரை பழங்காநத்தத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் நடந்தது போன்றே தற்போதைய தவெக ஆட்சியிலும் இந்து மத உணர்வுகளுக்குத் தொடர் அவமதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், குற்றங்கள் குறையாமல் அப்படியே தொடர்வதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தும், தவெக அரசு அதை அமல்படுத்தத் தவறிவிட்டதாக அர்ஜுன் சம்பத் சுட்டிக்காட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அரசு தடுத்து வருவதாக சாடிய அவர், இந்த விவகாரத்தில் முந்தைய திமுக அரசின் மெத்தனப் போக்கையே தற்போதைய தவெக அரசும், அதன் அமைச்சர் நிர்மல்குமாரும் பின்பற்றி வருவதாகக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவர்களின் மத அடையாளங்கள் விவகாரத்திலும் தவெக அரசை அவர் கடுமையாகச் சாடினார். “மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது” எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறுவது ஏன் இந்து மாணவர்களை மட்டுமே குறிவைத்து அமல்படுத்தப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், இதைக் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மாணவர்களிடம் கூற முடியுமா என்றும் ஆவேசப்பட்டார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைப் பெறுவதற்காகவே இத்தகைய ஜாதி, மதப் பிரச்சினைகளைத் தவெக அரசு உருவாக்கி வருவதாகவும், அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் விவரித்தார்.
தமிழ்நாட்டில் தற்போது போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அர்ஜுன் சம்பத், தற்போதைய அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் வெறும் ‘ரீல்ஸ்’ அரசாக மட்டுமே செயல்படுவதாகத் தெரிவித்தார். தவெக அமைச்சர்கள் திமுகவினரைப் போலச் செயல்படாமல், டெல்லி சென்று பிரதமரிடம் நிதி பெற்ற முதலமைச்சர் விஜய்யைப் போல ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்றும், இந்துக்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் முறையாக வழங்கத் தவெக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.