கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கஞ்சா போதை ஆசாமியை அப்பகுதி மக்கள் பிடித்துக் கட்டிவைத்துத் தர்ம அடி கொடுத்து, தவெக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் கிராமத்தில் இந்த அதிர்ச்சி காரியம் அரங்கேறியுள்ளது. தவெக அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் நள்ளிரவிலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து குற்றவாளியைக் கைது செய்த விதம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காராமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாகக் கஞ்சா போதையில் நடந்து வந்த அதே ஊரைச் சேர்ந்த விஜயகணபதி என்ற வாலிபர், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு அந்தச் சிறுமியிடம் மிகக் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்த அந்தச் சிறுமி பயத்தில் மரண ஓலமிட்டு அலறியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும், அப்பகுதி பெண்களும் விஜயகணபதியைத் தப்பியோட விடாமல் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த ஆசாமியை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்துச் சொல்லிச் சொல்லி அடித்து உதைத்தனர். பின்னர், இதுகுறித்து உடனடியாகத் தவெக அரசின் பெண்களுக்கான சிறப்புப் பாதுகாப்புப் பிரிவான ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர், பொதுமக்களின் பிடியில் இருந்த விஜயகணபதியை மீட்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விஜயகணபதி முற்றிலும் கஞ்சா போதையில் இருந்ததும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பின் விஜயகணபதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். ஆபத்தான நள்ளிரவு நேரத்திலும் உடனடியாகப் பாய்ந்து வந்து நடவடிக்கை எடுத்த சிங்கப்பெண் படையினரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.