Posted in

பிரிட்டனை அச்சுறுத்தும் துறைமுகங்களை முடக்கி வன்முறை: மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரத்திற்கான ‘ஒத்திகையா’?

பிரிட்டனின் டோவர் மற்றும் போர்ட்ஸ்மத் துறைமுகப் பகுதிகளில் முகமூடி (Balaclava) அணிந்த நூற்றுக்கணக்கான தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய திடீர் வன்முறைப் போராட்டங்கள், நாடு முழுவதும் வெடிக்கவிருக்கும் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரத்திற்கான “ஒத்திகை” (Rehearsal) என உளவுத்துறையும் சமூக அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

பிரான்ஸிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை வழிமறிக்க ‘பேட்ரியாட் பிளாட்ஃபார்ம்’ (Patriot Platform) போன்ற வலதுசாரி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சில மணி நேரங்களிலேயே திரண்டு இத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கருப்பு ஆடை மற்றும் பாலாக்கலவா முகமூடிகளை அணிந்த இந்த கும்பல், போர்ட்ஸ்மத் கடற்கரையில் கலவரத் தடுப்புக் காவல்துறையினர் மீது கற்களையும் செங்கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தியதில் பல காவலர்கள் காயமடைந்தனர்.

திடீரெனத் திரண்டு பொதுமக்களுக்கும் போக்கவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் இந்த “மின்னல்வேகத் தாக்குதல்” உத்தி (Flash-mob tactics), காவல் அமைப்புகளைத் திணறடிக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி துறைமுகங்கள் மற்றும் பொதுச் சாலைகளை முடக்கும் இத்தகைய போக்கு, நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு விடப்பட்ட மாபெரும் சவால் எனவும், இது பிரிட்டனில் பெரிய அளவிலான உள்நாட்டுக் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொது இடங்களில் முகமூடிகள் மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிய உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என ‘ரிஃபார்ம் யூகே’ தலைவர் நைஜல் ஃபரேஜ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அகதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கே இத்தகைய மக்கள் கொந்தளிப்பிற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், வன்முறையில் ஈடுபடும் முகமூடி கும்பல் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.