Posted in

ரயிலில் பயணித்து அட்வைஸ்! சென்னை நந்தனம் மெட்ரோ தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி ஆய்வு!

சென்னை பெருநகர மக்களின் முக்கியப் போக்குவரத்துச் சேவையாக விளங்கும் மெட்ரோ ரயில்களின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை நேரில் கேட்டறியும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். பயணத்தின் போது, ரயிலில் இருந்த பயணிகளிடம் மெட்ரோ ரயில் சேவைகள், கட்டண வசதிகள் மற்றும் அவசியத் தேவைகள் குறித்து அவர் நேரில் கேட்டறிந்தார்.

ரயில் பயணத்தை முடித்துக்கொண்டு நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தலைமை அலுவலகத்திற்கு நடந்து சென்றார். வழியில் அவரைக் காண்பதற்காகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நோக்கி அவர் கையசைத்து வணங்கியபடி மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு அவருக்கு மெட்ரோ உயராதிகாரிகளும் ஊழியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் இயங்கி வரும் பிரதான ‘கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்தை’ (Command and Control Center) முதலமைச்சர் விஜய் விரிவாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மெட்ரோ ரயில்களின் நிகழ்நேர இயக்கம், பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள், கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட உள்ள அதிநவீன ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்ப அமைப்புகள் குறித்து வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, நந்தனத்திலிருந்து மீண்டும் மெட்ரோ ரயில் மூலமாக கிண்டி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகப் போரூர் மற்றும் பூந்தமல்லி பகுதிக்குச் சென்று, ரூ.63,246 கோடி மதிப்பில் 118 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மெட்ரோ விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.