தேர்தல் வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை, மனுதாரர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, அந்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் டி.சிவஞானசம்பந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2018-இல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘டிஎம்கே அறக்கட்டளையின்’ (DMK Charitable Trust) மேலாண்மை அறங்காவலராகப் பொறுப்பேற்றார். அதன் பின், 2019-இல் செங்கல்பட்டு மாவட்டம் கதம்பாடியில் ₹2.27 கோடி மதிப்பிலான அசையாச் சொத்தை அந்த அறக்கட்டளை வாங்கியுள்ளது. ஆனால், இந்த விவரங்களை வேட்புமனுவின் படிவம் 26-இல் மு.க.ஸ்டாலின் குறிப்பிடாமல் மறைத்துவிட்டார்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளில் தனிப்பட்ட முறையில் மு.க.ஸ்டாலினுக்குச் சொந்தப் ஆதாயம் அல்லது விருப்ப உரிமை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று சுட்டிக்காட்டினர்.
நீதிபதிகளின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.