ரஷ்யாவின் பொருளாதார எந்திரத்திற்கும் ராணுவ விநியோகச் சங்கிலிக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், ‘ரஷ்யாவின் அமேசான்’ என்று அழைக்கப்படும் ‘வைல்ட்பெர்ரீஸ்’ (Wildberries) ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட லாயிஸ்டிக்ஸ் விநியோக மையங்கள் மீது உக்ரைனியப் படைகள் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க், தம்போவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் உள்ள மிகப்பெரிய கிடங்குகள் உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன்களால் அடுத்தடுத்துத் தகர்க்கப்பட்டு வருவது, அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வைல்ட்பெர்ரீஸின் ரியாசான் பிராந்தியத்தில் அமைந்துள்ள முக்கிய வரிசையாக்க மையம் (Sorting Center) மீது உக்ரைனிய ட்ரோன்கள் அண்மையில் நடத்திய தாக்குதலில், கிடங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தாக்குதலைத் தொடர்ந்து ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்ட போதிலும், அங்குச் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. உக்ரைனின் இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல்களால் இதுவரை சுமார் 7-க்கும் மேற்பட்ட முக்கிய விநியோக மையங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவிலியன் இ-காமர்ஸ் நிறுவனத்தின் கிடங்குகளை உக்ரைன் ஏன் இலக்கு வைக்கிறது என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ள உக்ரைனிய அதிகாரிகள், வைல்ட்பெர்ரீஸ் நிறுவனத்தின் தளங்கள் மூலம் ரஷ்ய ராணுவத்திற்குத் தேவையான உடல் கவசங்கள், ஹெல்மெட்டுகள், ட்ரோன் பாகங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், உக்ரைனின் அஞ்சல் மற்றும் லாயிஸ்டிக்ஸ் மையங்கள் மீது ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கியிவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக வைல்ட்பெர்ரீஸ் தளத்தில் பொருட்களை விற்பனை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான சிறு வணிகர்கள் கடுமையான நிதி இழப்பைச் சந்தித்துள்ள தோடு, ரஷ்ய பொதுமக்களிடையேயும் போர் குறித்த பீதியை அதிகரித்துள்ளது. போரைக் க்ரெம்ளின் மாளிகைக்குள்ளேயே கொண்டு செல்லும் உக்ரைனின் இந்த உத்தி, ரஷ்யாவின் போர் ஆதரவுப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்தி வருவதாகப் சர்வதேச ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.