செங்கடலின் தெற்குப் பகுதியில் பயணிக்கும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் (Transit Fees) விதிக்க ஏமனின் ஹவுதி அமைப்பினர் திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியா மீது அண்மையில் கடற்படை முற்றுகையை (Naval Blockade) பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுக்க ஹவுதிகள் பரிசீலித்து வருகின்றனர்.
செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் மிக முக்கியமான பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களுக்கு இந்தக் கட்டணத்தைச் சுமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்வின் போது, ஈரானிய அதிகாரிகளுடன் இணைந்து இந்தத் திட்டம் குறித்து ஹவுதிகள் விரிவாக ஆலோசித்துள்ளதாகவும், கட்டணங்களை வசூலிக்க பிரத்யேக அமைப்பை உருவாக்க ஈரானிய ஆலோசகர்கள் ஹவுதிகளுக்கு உதவி வருவதாகவும் தெரிகிறது.
சர்வதேச கடல்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்குச் சாதகமான நிலையை உருவாக்க ஹவுதிகள் முனைகின்றனர். இருப்பினும், சீனாவுடன் நடத்தப்பட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகளின் காரணமாகச் சீன வணிகக் கப்பல்களுக்கு மட்டும் இந்தக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கடலில் சர்வதேசக் கடற்படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், முழுமையான பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையை ஹவுதிகள் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கின்றனர்.
ஏற்கெனவே சவுதி அரேபியாவிற்கான கடல்வழிகளை முடக்கியுள்ள ஹவுதிகளின் இந்த புதிய நடவடிக்கை, சர்வதேச வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. சர்வதேசக் கடல்வழிச் சட்டங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.