Posted in

உணவு மற்றும் சீருடைப்படி அதிரடி உயர்வு – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) விடுதிகளில் தங்கிப் பயின்று வரும் மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான ஊக்கத்தொகையைத் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, விளையாட்டு வீரர்களின் திறனை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதியொதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய அறிவிப்பின்படி, விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெறும் சுமார் 2,600 மாணவ, மாணவியருக்கான தினசரி உணவுப்படி ரூ.350-லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவுப்படிக்கான மொத்த செலவினத் தொகை ரூ.29.12 கோடியிலிருந்து ரூ.37.44 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்குத் தரமான மற்றும் சத்தான உணவுகள் தடையின்றி கிடைப்பது தவெக அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையில் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுப்படி மட்டுமன்றி, மாணவர்களின் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான சீருடைத் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.15,000 ஆகவும், சிறப்பு நிலை கல்லூரி மாணவ, மாணவியருக்கான சீருடைத் தொகை ரூ.10,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் திறனை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ரூ.2,000 என்ற தொகை, தற்போது ரூ.10,000 ஆக ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக முந்தைய பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.31.72 கோடியிலிருந்து, தற்போது ரூ.44.39 கோடியாக நிதி அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக ரூ.12.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரக் காரணங்கள் மற்றும் நிதி நெருக்கடி எதுவும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்கிறார் என்றும், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாட்டை மாற்றுவதே இந்த அரசின் இலக்கு என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.