தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே போக்ஸோ வழக்குகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கடுமையான காரசார விவாதம் வெடித்தது. அவையில் தவெக தரப்பில் அடுக்கப்பட்ட கடுமையான பொதுவான குற்றச்சாட்டுகளுக்குத் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையிலேயே, “ஆதாரங்கள் இல்லாமல் ஒட்டுமொத்தமாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது” என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்குச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
அவையில் புள்ளிவிவரங்களுடன் பேசத் தொடங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2024-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ (POCSO) வழக்குகள் ஒரே ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. 2023-ல் 6,968 ஆக இருந்த வழக்குகள், 2024-ல் 10,046 ஆக உயர்ந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம். அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த வழக்குகளைக் குறைக்க எத்தனை முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 40 நாட்களில் காவல்துறை ஒட்டுமொத்தமாகச் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், ‘சிங்கப்பெண் படை’ மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். அப்போது, திமுகவில் உள்ள சிலரைக் குறிப்பிட்டு அவர் தனிப்பட்ட முறையில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது, அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, “ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது; எந்தப் போலீஸ் ஸ்டேஷன், யார் குற்றவாளி என்ற விவரத்தைக் கூறுங்கள்” எனப் பலத்த கோஷங்களை எழுப்பி முரண்டு பிடித்தனர். இதனால் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட சபாநாயகர், “எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது முதலமைச்சர் விஜய் அவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்புகளை எடுத்து வருகிறார், நாளை அவரே அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவான பதிலளிக்கக் காத்திருக்கிறார். எனவே, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரமற்ற மற்றும் ஒத்தப்பொதுவான குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்து அமர வைத்தார். அதன் பின் பேசிய அமைச்சர், “கோடான கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் தனிநபர்கள் செய்யும் தவறுகளுக்குச் சட்டத்தின்படி எங்கள் முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்; அடுத்த 6 மாதங்களில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு மாற்றப்படும்” என்று கூறித் தனது உரையை முடித்தார்.